மின்கசிவு காரணமாக அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கியாஸ் நிறுவன பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் அந்த அலுவலகத்தில் இருந்து புகை வெளியானதை பார்த்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலுவலகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த 3 கம்ப்யூட்டர்கள், ஏ.சி., பணம் எண்ணும் எந்திரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.