மர்ம நபர்கள் முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலரின் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் முன்னாள் அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனுக்கப்பட்டு கிராமத்தில் சொந்தமாக நிலம் இருப்பதால் நெற்பயிர் சாகுபடி செய்யும் சமயத்தில் மட்டும் அங்கு சென்று உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் போன்ற பணிகளை செய்வார். அப்போது மட்டும் அந்த கிராமத்தில் இருக்கும் அவர்களது வீட்டில் தங்கி இருப்பது வழக்கம். இதனையடுத்து வேலை முடிந்த பிறகு மீண்டும் இவர்கள் ஆரணிக்கு திரும்பி விடுவார்கள்.
இந்நிலையில் முனுக்கப்பட்டு கிராமத்தில் இருக்கும் இவரது வீட்டிற்குள் யாருமில்லாததால் அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து விட்டனர். அதன்பின் வீட்டில் உள்ள பொருட்களை அங்குமிங்கும் வீசியதோடு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பத்திரங்கள், துணிமணிகள் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் குவித்து தீவைத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் பம்பு செட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கட்டில் போன்ற அனைத்துப் பொருள்களுக்கும் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக இவ்வாறு மர்மநபர்கள் தீ வைத்தனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.