அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டாவது மாடியிலிருந்து ஒரு நபர் தன் குழந்தையை கீழே தூக்கி வீசியிருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேல்தளத்தில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்து வந்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.
எனினும், அதிக அளவில் தீ பரவத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு படையினர் இரண்டாவது மாடியிலிருந்த நபரிடம் குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி வீசுங்கள் என்று கூறினார்கள். உடனடியாக அந்த நபர் சிறிதும் தாமதிக்காமல், இரண்டாம் மாடியிலிருந்து தன் குழந்தையை மீட்புப்படையினரிடம் வீசிவிட்டார்.
மீட்புப்படையினர் பாதுகாப்பாக அந்த குழந்தையை பிடித்துக்கொண்டார்கள். அதன்பின்பு அவர்களும் கீழே குதித்து தப்பி விட்டனர். அதிர்ஷ்டவசமாக கீழே குதித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அந்த கட்டிடத்திலிருந்து 50 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.