Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் வீடு முழுவதும் பற்றி எரிந்த தீ!”.. 4 குழந்தைகள் பலி.. ஆஸ்திரேலியாவில் பரிதாப சம்பவம்..!!

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக காவல்துறையினருக்கு நள்ளிரவு நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சுமார் 10 நிமிடங்களில் தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

ஆனால், அதற்குள் அந்த வீடு முழுவதும் தீ பரவி மளமளவென எரிந்துள்ளது. அதன்பின்பு, வீடு மொத்தமாக சேதமடைந்து விட்டது. இதற்கிடையில், அந்த வீட்டில் வசித்த, ஒரு ஆண், பெண் மற்றும் 8 வயது குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அந்த வீட்டில் மீதமுள்ள 4 குழந்தைகளும் சடலமாகத்தான் மீட்கப்பட்டனர்.

இது குறித்து பக்கத்து வீட்டில் வசிப்பவர் கூறுகையில், குடியிருப்பு முழுவதும் கோரமாக பற்றி எரிந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது. எனினும், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் ஒருவர், தீ பற்றி எரிந்த போது அந்த வீட்டில் இருந்த நபர், என் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று கதறியதை கேட்டதாக கூறியிருக்கிறார். தீயணைப்பு படையினர் 40 பேர் சேர்ந்து, சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |