சீனாவில் உள்ள தற்காப்பு கலை மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட 18 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஹெனான் என்ற மாகாணத்தில், Zhenxing என்ற தற்காப்பு கலை மையம் இயங்கிவருகிறது. இம்மையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் காயங்களுடன் மீட்கப்பட்ட 16 நபர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அந்த தற்காப்புக்கலை மையத்தில் பயிலும் குழந்தையின் தந்தை கூறுகையில், இந்த மையத்தில் காலை நேரங்கள் முழுக்க குழந்தைகள் பயிற்சி பெற்றுவிட்டு இரவில் அங்கேயே தூங்குவார்கள் என்று கூறியிருக்கிறார். இக்கோர சம்பவத்தில் தற்காப்புக்கலை மையத்தின் இரண்டாவது தளத்தில் தூங்கிக்கொண்டிருந்த பல குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது தெரியவில்லை. எனவே அந்த மையத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.