தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளியாபுரத்தில் இருக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள தென்னை நாரை தொழிலாளர்கள் வெயிலில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அப்பகுதியில் பலமாக வீசிய காற்றினால் தீயானது மளமளவென பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தென்னை நார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் எந்திரங்கள், தென்னை நார் போன்ற 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மின் வயர்கள் மீது காகம் அமர்ந்ததால் இரண்டு வயர்கள் உரசியதிலிருந்து வந்த தீப்பொறி தென்னை நார்களின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.