கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் குளிர் பருவம் இருந்த போதிலும், பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால் காடுகளில் உள்ள மரங்கள் கருகிய நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இரவில் திடீரென பயங்கரமாகத் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் இருந்த விலங்குகள் நான்கு திசையிலும் ஓடியுள்ளன.
இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகைமூட்டம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும் கோடை காலம் நிலவுவதால் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு கொடு ஏற்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.