கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தளவாய் தெருவில் ராமசுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆனதால் ஆறுமுகம் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டு ஆறுமுகம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு எரிந்துள்ளது.
இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மேற்கூரை முழுவதும் எரிந்து விட்டது. அந்த மேற்கூரை தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தின் மீது விழுந்து தீப்பற்றியதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். இது குறித்து தகவலறிந்த நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதில் அந்த வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டர் வெடிக்கவில்லை என்பதால் பெருமளவு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.