அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் மின் கம்பிகளில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை சுற்றி ஏராளமான குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தினமும் பொதுமக்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் மின் கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனை பார்த்ததும் சீட்டு வாங்க வரிசையில் காத்திருந்த நோயாளிகள் மற்றும் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் உடனடியாக அங்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதன்பின் தீயில் கருகிய மின்கம்பிகளை மாற்றும் பணியில் மின்சாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் மின் அழுத்த பிரச்சனை காரணமாக இவ்வாறு தீப்பிடித்து இருக்கலாம் என்று மின்சாரதுறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.