மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய்மார்களும், 36 பச்சிளம் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் மகப்பேறு வார்டு இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது. இந்த வார்டில் பிரசவம் முடிந்த தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வார்டில் உள்ள டாக்டர்கள் தங்கும் அறையில் இருந்த ஏசியில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் கரும்புகையானது அறை முழுவதும் பரவியதால் அங்கு இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும் வேகமாக அந்த வார்டுக்கு சென்று தாய்மார்களையும், 36 பச்சிளம் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவமனையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இந்த தீ விபத்து குறித்து அறிந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு போன்றோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய தாய்மார்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தீயணைப்பு வீரர்களையும் பாராட்டியுள்ளனர்.