Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் தீ விபத்து…. ஜன்னல் வழியாக தப்பித்த நோயாளிகள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது..

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ருமேனியாவில் தென் கிழக்கு பகுதியில் உள்ள கான்ஸ்டென்டா நகரில் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கொரோனா  உட்பட மற்ற நோயாளிகள் 113 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

குறிப்பாக இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். மேலும் அவர்களில் பலர் மருத்துவமனை ஜன்னல்களில் இருந்து தப்பித்து வெளியேறி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மருத்துவமனையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனைகள் தீ விபத்தில் சிக்கிய பலரை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |