மர்ம நபர்கள் தொழிலதிபர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் மோகன் பட்டேல் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் மரப் பட்டறை ஒன்றை தஞ்சாவூர் ரோட்டில் நடத்தி மொத்தமாக மரங்களை வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா கெஸ்ட், மாருதி ஆம்னி கார் மற்றும் டாடா வென்ச்சர் போன்ற கார்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த நிலையில், டாடா கெஸ்ட் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து மோகன் பட்டேலுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்து விட்டனர்.
மேலும் இது குறித்து திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த டாடா கெஸ்ட் காரை அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர். இந்த விபத்தில் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பாதியளவு எரிந்து சேதமான நிலையில், முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்கள் அந்த கார்களுக்கு தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.