ஐ.டி கம்பெனியில் பற்றி எரிந்த தீயை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் முதல் மாடியில் தனியாருக்கு சொந்தமான ஐ.டி கம்பெனி ஒன்று செயல்படுகின்றது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் ஐ.டி நிறுவனத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி திருவல்லிக்கேணி, எழும்பூர் போன்ற பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஐ.டி கம்பெனியில் பற்றி எரிந்த தீயை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆயிரம் விளக்கு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மின் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அருகிலிருந்த சோபாவில் தீ பிடித்ததும், மளமளவென தீயானது அனைத்து அறைகளுக்கு பரவியதும் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள், எலக்ட்ரிகல் சாதனங்கள் மற்றும் நாற்காலிகள் எரிந்து நாசமாகி விட்டன. மேலும் இந்த விபத்தின் போது யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.