அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளாம் பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அரவை மில்லானது சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளிமேடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மில்லுக்கு திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் டி-ஷர்ட்கள் மற்றும் பனியன்கள் உற்பத்தி செய்தது போக மீதம் உள்ள கழிவுகள் மறுசுழற்சி மூலம் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
இந்த மில்லில் உள்ள இயந்திரங்கள் மூலம் அவ்வாறு கொண்டு வரப்படும் கழிவு துணிகள் பஞ்சாக மாற்றம் செய்யப்படுகின்றன. அதன்பின் இந்த பஞ்சு மீண்டும் பனியன் தயாரிப்பதற்கு தேவையான நூல்களாக உற்பத்தி செய்யப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அங்கு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி, பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயானது மளமளவென பரவி விட்டது. இதனால் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விட்டனர்.
இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும், இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் பஞ்சுகள் எரிந்து நாசமாகியது என்றும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சித்தோடு போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.