பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை ரோடு எம்.ஆர்.டி நகரில் செந்தில் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒரு பிளாஸ்டிக் குடோனை கடந்த இரண்டு வருடமாக நடத்தி மொத்த வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு திடீரென இந்த பிளாஸ்டிக் குடோன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இச்சம்பவம் குறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த குடோனுக்கு அருகில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் இருந்ததால் அவர்களை வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றினர். ஆனால் தீயானது மளமளவென பரவ தொடங்கியதால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இதனையடுத்து அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவகுமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் போலீசாரின் விசாரணை முடிந்ததால் தான் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.