நகைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் நகைகள் வைப்பதற்கான பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் திடீரென இந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் நகை வைக்க தயாரிக்கப்பட்ட அனைத்து பெட்டிகளும் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.