மின் வயர் உரசியதால் வைக்கோல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெட்டுவாகோட்டை கிராமத்தில் விவசாயியான முத்துச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துச்செல்வம் தனது வயலில் இருந்து வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வைக்கோல் போர் மீது மின் வயர் உரசியதால் வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைக்கோலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீவிபத்தில் வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.