நூற்பாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளகிணறு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நூற்பாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள குடோனில் விற்பனைக்காக கழிவுப் பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அதன்பின் சற்று நேரத்திலேயே கழிவுப் பஞ்சு மூட்டைகளில் தீ மளமளவென பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், கழிவுப் பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.