மரக்கடையில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாவக்கல் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மரக்கடை சிங்காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் இவரது மரக்கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரக்கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் மரக்கடையில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மர சாமான்கள் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும் போது மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.