நாகர்கோவில் அருகே அரசுப் பள்ளியில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளைப்பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தான் தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன், தன் தொடக்க கல்வியை பயின்றார்.இந்தப் பள்ளியில் அமைந்துள்ள சத்துணவுக்கூடத்தில் சமையல் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, எரிவாயு கசிந்ததால் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.
உடனடியாக பள்ளி வகுப்பறைகளில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சத்துணவு கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பி, மின் சாதனப் பொருட்கள் தீக்கிரையாகின. இதற்கிடையே அப்பள்ளி ஆசிரியர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.