அப்பர் பவானி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதிகளில் இருக்கும் செடிகள் மற்றும் மரங்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீ தடுப்பு குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பர் பவானி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் அங்குள்ள செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இது குறித்து தகவலறிந்த குந்தா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியாததால் அதிரடிப்படையினரும், வனத்துறையினரும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் காட்டுத் தீயானது அதிரடிப்படை முகாம் வரை பரவியதால் அவர்கள் அப்பகுதியில் உள்ள செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி முகாமுக்குள் தீ பரவாமல் தடுத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து அப்பர் பவானி வனப்பகுதியில் மின் வாரிய குடியிருப்பு பகுதியில் காட்டுத் தீ பரவியதால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து விட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த காட்டு தீயால் 5 ஏக்கருக்கும் மேலான வனப்பகுதிகள் எரிந்து நாசமானதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வனப் பகுதியில் இருக்கும் செடி கொடிகள் காய்ந்த நிலையில் இருப்பதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் சிகரெட் பிடித்து விட்டு அதனை கீழே போட கூடாது எனவும், சுற்றுலா பயணிகள் அடுப்பு வைத்து சமையல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.