ரஷ்யா, முதன் முதலாக விண்வெளிக்கு சென்று திரைப்படம் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஆங்கில திரையுலகில் அதிகமாக விண்வெளி திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் விண்வெளிக்கே நேரடியாக சென்று முழு திரைப்படத்தையும் உருவாக்குவதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே போட்டி நிலவுகிறது.
அமெரிக்காவின் பிரபலமான ஹாலிவுட் நடிகரான டாம் குரூசை கதாநாயகனாக வைத்து விண்வெளிக்கு சென்று திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக கடந்த வருடத்தில் நாசா தெரிவித்திருந்தது. எனினும் அதன் பின்பு அப்படம் தொடர்பில் எவ்வித தகவலும் வெளிவரவில்லை.
அதே சமயத்தில் விண்வெளியில் முதல் திரைப்படத்தை உருவாக்க ரஷ்யா தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளது. பிரபல இயக்குனரான கிளிம் ஷிப்பென்கோ இயக்கத்தில், யுலியா பெரெசில்ட்டை நாயகியாக வைத்து, வைசவ் என்ற முதல் விண்வெளி திரைப்படத்தை எடுக்கவிருப்பதாக, ராஸ்கோமாஸ் என்ற ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தது.
வைசவ் என்றால் சவால் என்று பொருள். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்யா, படப்பிடிப்புக்கு தேவையான கருவிகளை, ‘பிராகிரஸ் எம்.எஸ். 17′ விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவை நேற்று அதிகாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் இயக்குனரும், நடிகையும் வரும் அக்டோபர் மாத தொடக்கத்தில் ‘சோயூஸ் எம்.எஸ்.19’ என்ற விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.