துபாயில் நிலவின் தோற்றத்தில் மிக பிரம்மாண்டமான சொகுசு விடுதி அமைக்கப்பட இருக்கிறது.
வான் அளவிற்கு மிகப்பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு பெயர் போன நகரமான துபாய், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கிறது. அதன்படி, தற்போது அங்கு நிலவின் வடிவமைப்பை போன்று மிகவும் பிரம்மாண்டமாக ஒரு சொகுசு விடுதி அமைக்கப்படவிருக்கிறது.
கனடா நாட்டின் மூன் ஓல்டு ரிசார்ட்ஸ் என்னும் நிறுவனமானது, இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளை செய்ய இருக்கிறது. சந்திரனின் மேற்பரப்பு போல வடிவம் கொண்ட பிரம்மாண்டமாக இந்த சொகுசு விடுதி அமைய இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த விடுதி, கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசு விடுதியின் உயரம் சுமார் 735 அடிகள் இருக்கும். இதற்கு ஆகும் கட்டுமான செலவுகள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் மதிப்பில் சுமார் 39,838 கோடி ரூபாய். சுமார் பத்து ஏக்கர் அளவில் நிலவின் தோற்றத்துடன் கட்டப்படும் இந்த விடுதியில் 300 ஸ்கை வில்லா குடியிருப்புகள், அறைகள், வெல்னஸ் சென்டர், இரவு விடுதிகள் போன்றவை இருக்கும்.
அந்த விடுதி, பயன்பாட்டுக்கு வரும் போது வருடந்தோறும் ஒரு கோடி மக்கள் வருவார்கள். அந்த வகையில் 1.8 பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.