அயர்லாந்து பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. இதில் ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது.
ஸ்டிர்லிங் 95
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரைன் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியில் மிரட்டிய ஸ்டிர்லிங் சர்வதேச டி20 அரங்கில் தனது 16ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த கெவின் ஓ பிரைன் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிர்லிங் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இமாலய இலக்கு
இதன்மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் காட்ரோல், பிராவோ, பியரி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
- https://twitter.com/ICC/status/1217546167137046528
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் லூயிஸ் அரைசதமடித்து அசத்தினார்.
ஆனால் அடுத்து களமிறங்கிய மற்ற வீரர்கள் நிலைத்துநின்று ஆடாததால் வெஸ்ட் இண்டீஸ் அணி இருபது ஓவர்களில் 204 ரன்களை மட்டுமே எடுத்தது.
திரில் வெற்றி!
இதன்மூலம் அயர்லாந்து அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
.@stirlo90 – Player of the Match! 👏👏👏 pic.twitter.com/UYgu73YLNb
— Cricket Ireland (@cricketireland) January 15, 2020