பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்கள் வளர்க்கப்படுவதுண்டு. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் அனைத்தும் பெரும்பாலும் வெளிநாட்டு ரக வகையைச் சேர்ந்த நாய்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு சிலர் மட்டுமே இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த நாய் வகைகளை வளர்த்து வருகின்றனர்.
அதிலும் ஒரு சிலர் மட்டுமே பாரம்பரிய தமிழ் இனத்திற்கே சொந்தமாக திகழக்கூடிய சிப்பிபாரை உள்ளிட்ட ராஜபாளைய நாட்டு நாய் வகைகளை வளர்த்து வருகின்றனர். இதுபோன்ற நாட்டு நாய்கள் தென் தமிழகத்தில் அதிகமாக காணப்படும். தற்போது பெரும்பாலான இடங்களில் காணப்படாமல் அழிந்து வரக்கூடிய இவ்வகை இனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, இந்திய ராணுவப் படையில் ராஜபாளைய நாட்டு நாய் வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாட்டு நாய் வகைகளே வீரர்களுக்கு உறுதுணையாக இருந்தன. தற்போது முதல் முறையாக தமிழ்நாட்டின் ராஜபாளையத்தை சேர்ந்த நாட்டு நாய்கள் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக தற்போது நாய்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நாட்டு நாய்களும் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.