ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மக்டலெனா ஆண்டர்சன், கடந்த புதன்கிழமை அன்று பட்ஜெட் தோல்வி ஏற்பட்டதால் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே பதவி விலகினார்.
சுவீடன், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமரான ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியை தழுவினார். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, நிதி அமைச்சரான மக்டலெனாவை கட்சி தலைவராக தேர்வு செய்தனர்.
அதன்பின்பு, அவரை பிரதமராக நியமிக்க நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. நாடாளுமன்றத்தில் இருந்த 349 உறுப்பினர்களில், மக்டலெனாவை பிரதமராக தேர்ந்தெடுக்க 117 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர், 174 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீதம் உள்ளவர்களில் 57 பேர் வாக்களிக்கவில்லை. மேலும் ஒரு எம்.பி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஸ்வீடன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், பிரதமர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க, அதிக உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை. ஆனால், ஒருவர் பிரதமராவதை எதிர்த்து 175 எம்பிக்கள் வாக்களித்தால், அவர் பதவி ஏற்க முடியாது. அதன்படி, மக்டலெனாவை பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு எதிராக, பெரும்பான்மையை விட ஒரு வாக்கு குறைந்ததால், அவர் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார்.
அதன்பின்பு, அவர் க்ரீன் கட்சியோடு சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் அவரின் பட்ஜெட் தோல்வியடைந்தது. எனவே கிரீன் கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.