ரயில் நிலையத்திற்கு கொண்டு வர தாமதமானதால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகள் உணவில்லாமல் இறந்துவிட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினமும் காலை 10 மணிக்கு வர வேண்டிய ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. இந்த ரயிலில் தான் அமராவதி அணை போன்ற பல்வேறு அணைகளில் வளர்ப்பதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 2.5 லட்சம் மீன் குஞ்சுகள் 400 பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது ரயில் நிலையத்திற்கு வந்த உடனே சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேகமாக அந்தப் பெட்டிகளை இறக்கியுள்ளனர்.
ஆனால் ரயில் 3 நிமிடம் மட்டுமே நின்றதால் 183 பெட்டிகளை மட்டுமே தொழிலாளர்கள் இறக்கிய நிலையில் மீதமுள்ள 217 பெட்டிகள் ரயிலிலேயே சென்றுவிட்டது. இதனையடுத்து திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த போது அந்த 217 மீன்குஞ்சு பெட்டிகளும் ஏற்கப்பட்டு மற்றொரு ரயிலில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்குஞ்சுகள் இருந்த அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தபோது அதில் ஒன்றரை லட்சம் மீன் குஞ்சுகள் இறந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி கூறும்போது, இவ்வாறு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து அணையில் வளர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட 2.5 லட்சம் மீன் குஞ்சுகள் 48 மணி நேரத்திற்குள் கோவைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ரயிலானது 3 நிமிடங்கள் மட்டுமே நின்றதால் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இருந்த 183 பெட்டிகள் மட்டுமே இறக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஒன்றரை லட்சம் மீன் குஞ்சுகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வர தாமதமானதால் உணவு இல்லாமல் இந்த மீன் குஞ்சுகள் இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.