ஆஸ்திரேலியாவில் மீன் பிடிக்க வந்த தம்பதியினர் இருவரையும் பசியோடிருந்த முதலை ஒன்று அச்சுறுத்தி மீனை விழுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தில் உள்ள கக்காடு (Kakadu) தேசியப் பூங்காவில் கணவன் மனைவி இருவரும் ஆற்றங்கரையில் மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும் நீண்ட நேரமாக தூண்டிலை போட்டு மீனுக்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீன் மாட்டவே இல்லை. இறுதியாக ஒரு வழியாக அவர்களில் மனைவிக்கு மீன் ஒன்று தூண்டிலில் சிக்கியது. இதனை மெதுவாக அவர் வெளியே இழுத்தார்.
அப்போது தான் ஒரு பிரச்சனை ஆரம்பித்தது. அதாவது மீனை மனைவி லாவகமாக பிடித்து தரையில் போட்டதும் அதனை பார்த்துவிட்ட ஒரு முதலை ஒன்று தண்ணீரில் இருந்து வேக வேகமாக நீந்தி கரைக்கு வந்தது. இதனை கண்ட பெண் மீனை இழுத்துக் கொண்டே சாலையில் சென்ற போதும் முதலை பின் தொடர்ந்ததால், பயத்தில் மீனை அப்படியே அதே இடத்தில் போட்டுவிட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின் மீனை லபக்கென்று விழுங்கிய முதலை மீண்டும் ஆற்றுக்குள் சென்றது. ஜோடியை விரட்டி மீனை விழுங்கும் முதலையின் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.