தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்தூர் அருகே வல்வினள பகுதியைச் சேர்ந்த மீனவர் ஏசுதாசன் (53) நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மீன் பிடிப்பதற்காக தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து 4 பேருடன் வள்ளத்தில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற வள்ளத்தின் மீது எதிர்பாராத விதமாக வீசிய ராட்சத அலையால் வள்ளம் கவிழ்ந்தது. இதனால் ஏசுதாசன் கடலில் மூழ்கி மாயமானார். மற்ற நபர்கள் கடலில் நீந்தி கரை சேர்ந்தனர். ஏசுதாசனை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர் . ஆனால் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் ஏசுதாசனின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில் தேங்காப்பட்டணம் துறைமுக கடல் பகுதியில் நேற்று காலை ஏசுதாசனின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏசுதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மீனவர் இறந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.