தனியார் நிறுவனத்தின் ஊழியரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்ற 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு 2 மணி அளவில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை மதிப்பில்லா செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பாலாஜி பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தப்பிச்சென்ற குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் சைபர் கிரைம் உதவியுடன் காவல்துறையினர் சென்னையில் பதுங்கி இருந்த இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பிரசாந்த், லோகு, கேபா மற்றும் இரண்டு சிறுவர்கள் என மொத்தம் ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் அவர்கள் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் திருடிச் சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.