கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாட்டில்களை கடத்தி சென்ற 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திற்கு கர்நாடக மாநிலத்திலிருந்து காரியமங்கலம் வழியாக மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரியமங்கலம் அருகிலுள்ள கும்பார அள்ளி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை வாங்கி தருமபுரிக்கு கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூரில் வசிக்கும் வெங்கடேஷ், ரங்கநாதன், நவீன் குமார், ஜெயவேல், காளிதாஸ் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்த போது, அதில் 2 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் அவர்களிடமிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 300 கர்நாடக மாநில மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.