கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் ஒரு குடும்பத்தினரை மிரட்டி அங்கிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் ஜோதிமணி-சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜோதிமணி பழைய மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் 5 பேர் இணைந்து ஜோதிமணியின் வீட்டு கதவை தட்டிய சத்தம் கேட்டு வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் தந்தை நந்தகோபால் எழுந்துவிட்டார். இதனையடுத்து அவர் கதவைத் திறந்தபோது, 5 மர்ம நபர்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.
இதனை தொடர்ந்து நந்தகோபாலன் சத்தம் கேட்டு வந்த ஜோதிமணியிடம், 5 பேரும் சேர்ந்து பீரோவின் சாவியை தருமாறு கத்திமுனையில் மிரட்டி, அதன்பின் பீரோ சாவியை பிடிங்கிய கொள்ளையர்கள் வீட்டின் பீரோவை திறந்து ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தையும், 13 பவுன் நகையையும் எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் ஜோதிமணியின் குடும்பத்தார் எவரும் வீட்டை விட்டு வெளியே வராத வண்ணம் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவத்தை செல்போன் மூலம் ஜோதிமணி தனது உறவினர்களுக்கு தெரிவித்தார்.
உடனே அவர்கள் விரைந்து வந்து ஜோதிமணியின் குடும்பத்தாரை மீட்டனர். இதனையடுத்து ஜோதிமணி திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி.ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் வழக்கு பதிந்து அந்த முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கத்தி முனையில் குடும்பத்தினரை மிரட்டி, நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.