பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார். அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவிலுள்ள சி.எம்.ஆர்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். அவருடைய திடீர் மறைவுக்கு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கேகே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் குடும்பத்தாரின் அனுமதியுடன் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தெரியவரும்.