முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சியினர் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ரவிச்சந்திரன் தன்னை விடுவிக்க கோரிய வழக்கில், 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.