பெங்களூருவிலிருந்து நாளை மறுநாள் சசிகலா தமிழகம் திரும்பும் நிலையில் சென்னையில் பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூருவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து நாளை மறுநாள் சசிகலா தமிழகம் திரும்புகிறார். தமிழகம் வரும் சசிகலா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் அனுமதியின்றி பேரணி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.