தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதற்கு மத்தியில் தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஜூன்-5ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்கான முதல் தவணை டோஸ் 6-ஆம் தேதி தான் வரும். தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசிகளை மாவட்ட ஆட்சியர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.