தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆரம்ப பள்ளிகளை திறக்க வேண்டும். ஆரம்ப பள்ளிகளை திறப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படாது. பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.