பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தினமும் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் பஸ் டிரைவர்கள் சாலையின் இடது ஓரமாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறு தூரம் தள்ளி நிறுத்துவதால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
இதனால் பேருந்தில் ஏறுவதற்கு ஓடி வரும் போது சில பயணிகள் கீழே விழுந்து காயமடையும் நிலையும், சில நேரங்களில் மரணமடையும் நிலையும் ஏற்படுகின்றது. எனவே டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தங்கள் பணியின்போது பேருந்து உரிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும். மாணவர்கள், முதியோர்கள், மாற்று திறனாளிகள், மகளிர்கள் ஏறி இறங்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஓட்டுநர் நடத்துனர் பணியின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. முக்கியமாக பயணிகளிடம் தரக்குறைவாக பேசக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.