நாடு முழுவதும் 78 முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் 78 முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம், “விழாக்காலங்களில் கட்டணம் அதிகரிக்கபடுவது வழக்கம். தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என கூறியுள்ளது.