தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானல் வருவோர் 2 தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படுவர் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார் .மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், குணா குகை, போன்றவை மூடப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சி, டால்பின் முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடாரம் அமைத்து தங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.