தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து கேரளாவின் ஆலப்புழா பகுதியிலிருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்டவை தமிழகம் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது இன்ஃப்ளூயன்சா என்ற வைரஸ் மூலமாக பறவைகளுக்கு இந்த காய்ச்சல் பரவுகிறது. பறவைகளின் தொண்டை மற்றும் தாடை கருத்து காணப்படுவது, சிறகுகள் சிலிர்ந்து, தோல் பகுதியில் ரத்தப் புள்ளிகள் காணப்படுவது இந்த நோயின் அறிகுறிகளாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பறவைகளின் எச்சங்கள் மூலமாக மற்ற பறவைகளுக்கும் பரவும் இந்த நோய் மனிதர்களை பாதிக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதனையடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 5 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் மற்றும் கோழிகள் குழிதோண்டிப் புதைக்கபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகம், கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் பறவை காய்ச்சல் பறவைக் கூடும் என மத்திய அரசு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் கேரளாவில் இருந்து கோழி மற்றும் வாத்து போன்ற பறவைகள் உடன் வரும் வாகனங்கள் எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றன. அனைத்து வழித்தடங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.