வங்கதேசத்தின் பாஜ்கிராம் பகுதியைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் என்பவர் வங்கதேச விடுதலைப் போருக்கு பின், சிமென்ட் தொடர்பான வர்த்தகம் செய்துவந்தார். அவருக்கு 30 வயதானபோது வணிகம் செய்ய அவர் வெளியூருக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை.
பல ஆண்டுகளாக தேடிய பின்னும் குடும்பத்தினரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஹபீபுர் ரஹ்மானின் மூத்த மகனின் மனைவி கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். போதிய நிதி இல்லாததால் மருத்துவ சிகிச்சை பெற இயலாத ஒருவருக்கு உதவி கேட்கும் அந்த வீடியோவை பார்த்ததும் அவருக்கு தனது மாமனாரின் நினைவு வந்துள்ளது.
இதையடுத்து தன் கணவரிடம் இந்த வீடியோ குறித்து தெரிவித்துள்ளார். ஹபீபுர் ரஹ்மானின் மூத்த மகன், வங்கதேசத்திலுள்ள தனது சகோதரர்களைத் தொடர்புகொண்டு மருத்துவமனைக்குச் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அங்கு தந்தையைக் கண்ட அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
“என் தாயாரும் மாமாக்களும் என் தந்தையை கண்டுபிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் என் தாயார் 2000ஆவது ஆண்டு இறந்துவிட்டார்” என்று ஒரு மகன் தெரிவித்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக ரசியா என்ற பெண், ஹபீபுர் ரஹ்மானை கவனித்துவந்துள்ளார். 1995ஆம் ஆண்டில் ஹஸ்ரத் ஷாஹாப் உத்தீன் சன்னதி என்ற இடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் ஹபீபூரை மோசமான நிலையில் கண்டெடுத்ததாக ரசியா கூறினார். மேலும், அன்றிலிருந்து ஹபீபுர் அவர்களுடன் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஹபீபுர் ரஹ்மான் சிகிச்சைக்காகத் தற்போது தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.