இந்தோனேசியாவில் கடலுக்குள் விழுந்த விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகள் இருக்கும் இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு ஸ்ரீவிஜய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் .737-500 ரக விமானம் 62 பயணிகளுடன் புறப்பட்டது ஆனால் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இழந்துவிட்டது. இதனால் ஜாவா கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு சில மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது உறுதி ஆகிவிட்டது.
இதனையடுத்து விமானிகளின் உரையாடலை சேமித்து வைக்கும் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழு தீவிரமாக இறங்கியது. இந்நிலையில் மீட்புக்குழுவினர் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் கடலினுள் கிடக்கும் கறுப்புப் பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதால் அதனை மீட்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தோனேஷியா போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. எனவே விமானத்தின் அந்த 2 கருப்புப்பெட்டி மீட்கப்பட்டால் அதில் பதிவான உரையாடல்களின் மூலம் விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.