ஈரான் நாட்டில் ஒரு பள்ளி வளாகத்தின் மீது போர் விமானம் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் இருக்கும் அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரத்திலிருந்து எப்-5 வகை போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தில் விமானிகள் இருவர் இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழும் நிலை ஏற்பட்டது.
எனவே, அதை தவிர்ப்பதற்காக விமானிகள் பள்ளிக்கூடம் ஒன்றின் விளையாட்டு மைதானத்தில் அவசரமாக தரையிறக்குவதற்கு முயன்றனர். பள்ளிக்கூடத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கத்தின் கட்டிடத்தில் விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. இக்கொடூர விபத்தில் விமானிகள் இருவர் மற்றும் அந்த பகுதியில் நடந்து சென்ற ஒரு நபரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிஷ்டவசமாக கொரோனாவால் பள்ளிக்கூடம் அடைக்கப்பட்டிருந்ததால், அந்த சமயத்தில் அங்கு மாணவர்கள் இல்லை. எனவே, எந்த வித பாதிப்பும் இல்லாமல் போனது.