செல்ஃபிக்கு போஸ் கொடுக்க மறுத்ததால் விமான நிலைய பணிப்பெண்ணை குடிபோதையில் தாக்கியவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லெ தி ஜியாங் (Le Thi Giang) என்பவர் வியட்னாமின் தன் ஹோவா (Tahn hoa) -வில் உள்ள தோ சுவான் (Tho Xuan) என்ற விமான நிலையத்தில் வியட்ஜெட் ஏர் நிறுவனப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் உங்களுடன் (லெ தி ஜியாங்) செல்பி எடுக்க வேண்டும் என்று 3 பயணிகள் கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்ணும் சரி என சம்மதித்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து மற்றொரு செல்ஃபி எடுக்க வேண்டும் என அவரிடம் கூறியுள்ளனர்.
அதற்கு அவர், தான் தற்போது பணியில் இருப்பதால் என்னால் முடியாது என்று மரியாதையுடன் அவர்களுக்கு பதிலளித்துள்ளார். ஆனால் அவர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் குடிபோதையில், அப்பெண்ணை மோசமாக திட்டியதுமட்டுமில்லாமல் எட்டி உதைத்து கீழே தள்ளி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு முறையே 3 ஆண்டுகள், 2 ஆண்டுகள் 10 மாதம், 1 ஆண்டு 10 மாதம் என சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.