கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக இருந்தது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இரவு 8 மணி அளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியது. இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறுகையில், “மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் கூடுதலாகத் திறக்கப்படும். எனவே, அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் அணையிலிருந்து உபரிநீர் நாளை (அக்.23) காலை திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர் .
மேலும், உபரிநீர் அதிகளவில் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த அறிவிப்பை அனுப்பிவைத்துள்ளதாகவும் மேட்டூர் அணை பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.