மும்பை கனமழை நிவாரண சேதத்தை போக்க மாநில அமைச்சரவை ஒரு மாத சம்பளம் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு மாவட்டமான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரில் பலத்த மழை கொட்டியது. அங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகளில் கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் 1,070 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த கனமழைக்கு 43 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள சாங்கிலியில் மட்டும் அதிகமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இன்று மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , வெள்ள நிவாரண நிதிக்கு மாநில அமைசர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும் அங்குள்ள பல்வேறு அரசு துறைகள் , சமூக அமைப்புகள் நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளனர்.
மேலும் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவுவதற்கு அரசின் சார்பில் ரூ.6 ,813 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.இதில் கோலாப்பூர், சாங்கிலி மற்றும் சட்டாரா மாவட்டங்களுக்கு ரூ.4,708 கோடியும், கொங்கன் பகுதி, நாசிக் மற்றும் பிற பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.2,105 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவையில் முடிவாகியுள்ளது.