துருக்கியில் கடந்த சனிக்கிழமை முதல் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்புநிலை பாதிக்கபட்டுள்ளது.
துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் காலையில் மெதுவாக பெய்து கொண்டிருந்த மழை பிற்பகலுக்கு மேல் திடீரென வலுப்பெற்று வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், சுரங்கப்பாதைகளிலும் தேங்கியதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் பசார் அருகே இருக்கும் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் புகுந்ததால், அங்குள்ள கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. முழங்கால் அளவு வெள்ளநீரில் பொருட்கள் மிதந்து செல்வதை அகற்றும் பணிகளில் கடையின் உரிமையாளர்கள் ஈடுபட்டு, இதனால் தங்களுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தேங்கி கிடக்கும் மழைநீர் வடிவதற்காக பாதாள சாக்கடை மூடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் உன்கபானி (Unkapani) பகுதியில் வீடின்றி தெருவோரம் வசித்து வந்த நபர் ஒருவர் கனமழையால் உயிரிழந்ததாக இஸ்தான்புல் (Istanbul’s) நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.