பழுதடைந்த ரயில்வே மேம்பால கைப்பிடிச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கும்பகோணம் நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த 45 ஆண்டுகளாக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த பாலத்தின் மேல் வடக்கு பகுதியில் கைப்பிடி சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மேம்பாலத்தின் மீது கனரக வாகனங்கள் அடிக்கடி செல்லும்போது அதிர்வுகளால் கைப்பிடி சுவர்களில் ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
அதனால் இந்த பாலத்திலுள்ள கைப்பிடி சுவர் எந்த நேரத்திலும் இடிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்து உயிர்பலி ஏற்படும் அபாயத்தில் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறையில் பழுதடைந்த ரயில்வே மேம்பால கைப்பிடிச் சுவரை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.