ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பானது, இந்திய நாட்டிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை வழங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கைவசம் வந்த பின்பு கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. அதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நிதி வழங்கி வந்த பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்பு நிதியளிப்பதை நிறுத்திக்கொண்டது.
மேலும், கடந்த மூன்று வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் உணவு தானியங்கள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது என்று ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பின் இயக்குனரான, மேரி எலன் மெக்ரோட்டி கூறியிருக்கிறார். கடந்த வருடம், இந்தியா தான் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 75 ஆயிரம் டன் அளவு கொண்ட கோதுமையை இலவசமாக அனுப்பியது.
எனவே, தற்போது அங்கு பஞ்சம் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதால், மீண்டும் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு, உணவு தானியங்கள் அனுப்ப பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்த வருடம் 25 லட்சம் டன் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த மாதம், ஐ.நா வில் நடைபெற்ற கூட்டத்தில், பல நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 100 கோடி டாலர்கள் நிதியளித்து உதவுவதாக உறுதிகூறியது. எனினும், அந்நாடுகள் இந்த உதவிகளை, தலிபான்களின் வழியாக கொடுக்காமல், நேரடியாக நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. எனவே அதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.